இல்லத்தால் மேற்கொள்ளப்படுபவை

ஸ்ரீபரமானந்தா இல்லத்தால் மேற்கொள்ளப்படும் அன்பளிப்புகள்:

ஸ்ரீபரமானந்தா இல்லமும் பல்வேறு வகையான அன்பளிப்புகளை இல்லத்துடன் சம்பந்தப்படாத வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள வறுமை நிலையிலுள்ளோருக்கு வழங்கி வருகின்றதென்பதைப் பெருமையுடன் அறியத் தருகின்றோம். அந்தந்தப் பகுதிப் பிரதேச செயலாளரின் அல்லது மாவட்ட நீதிபதியின் சிபார்சின் பெயரில் வறுமை நிலை உறுதிப் படுத்தப்பட்டு கீழ்க் குறிப்பிடும் அன்பளிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) வறுமை நிலையிலுள்ள பல்கலைக் கழக மாணவர்கள்:

ஒவ்வொரு வருடமும் வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள் (வடமராட்சி தெற்கு மேற்கு, வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்கு ஆகிய) மூன்று பிரதேச செயலாளர்களிடமிருந்து பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட வறுமை நிலையிலுள்ள மாணவர்களில் இவ்விரண்டு பேரின் விபரங்கள் கோரப்பட்டு அவர்களுக்கு நிதியுதவி செய்யப்படுகின்றது. ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் ரூபா 1500.00 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்படுகின்றது. 2018 தொடக்கம் இத்தொகையை ரூபா 2000.00 ஆக அதிகரிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.

(ஆ) க.பொ.த.(உ/த) கல்வியை முடித்த எமது இல்ல மாணவர்கள்:

க.பொ.த.(உ/த) படிப்பை முடித்த பின்னர் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் செலவுகள் இல்லத்தால் கவனிக்கப்படுகின்றன. ஆனால் சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படாத மாணவர்களின் ஸ்ரீபரமானந்தா இல்லத்துடனுள்ள தொடர்பு அத்துடன் முடிவடைந்து விடுகின்றது. ஆனால் இந்த மாணவர்களிற் சிலர் H.N.D.E., G.A.Q போன்ற உயர் கற்கை நெறிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டு வறுமை நிலை காரணமாகக் கல்வியைத் தொடர முடியாமல் இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரதேச செயலாளரின் சிபார்சினைப் பெற்று அவர்களின் வறுமை நிலையை உறுதி செய்து கல்வியைத் தொடர்வதற்கான ஒழுங்குகளை இல்லம் மேற்கொள்கின்றது.

(இ) பேருந்து சேவை:

சில அரச திணைக்களங்கள் நிறுவனங்கள் முதலியன சிறுவர்கள் நிகழ்ச்சிகளை நடாத்துவதற்காக எமது பேருந்து சேவையை இலவசமாக வழங்கும்படி கோருவதுண்டு. அந்நிகழ்வில் எமது பிள்ளைகளின் பங்களிப்பும் இருக்குமாயின் அவ்வாறான சேவைகள் பயணக்கட்டணம் தவிா்க்கப்பட்டு  இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

(ஈ) சிறுவர் முதியோர் தின நிகழ்வுகளுக்கு உதவுதல்:

அரச, அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் சிறுவர் முதியோர் நிகழ்வுகளுக்கு நிதியுதவியும் எமது பிள்ளைகளின் கலை கலாசார பங்களிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வடமராட்சியிலுள்ள மூன்று பிரதேச செயலாளர்களால் வருடாவருடம் நடாத்தப்பட்டு வருகின்ற சிறுவர் முதியோர் தின விழாவுக்கு இல்லத்தால் கணிசமான நிதியுதவி செய்யப்பட்டு வருகின்றது என்பதில் பெருமை கொள்கின்றோம்.