எதிர்காலத் திட்டங்களும் எதிர்பார்ப்புகளும்

ஸ்ரீ பரமானந்தா இல்லத்தின் அபிவிருத்தி, முன்னேற்றம், சிறுவர், முதியோர், ஊழியர்கள் யாவரினதும் தேவைகள், அவர்களின் வசதி வாய்ப்புகளை மேம்படுத்துதல், போன்ற பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, தர்மகர்த்தா சபையினரின் மாதாந்த நிர்வாக சபைக் கூட்டங்களில் அலசி ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அவற்றைச் செயற்படுத்துவதே வழமையான நடைமுறை. இவற்றிற்கு பொது மக்கள், நலன் விரும்பிகள், இல்லத்திற்கு வருகை தருவோர் ஆகியோரின் ஆலோசனைகள் அபிப்பிராயங்களை வேண்டி நிற்கின்றோம். இதனை நோக்காகக் கொண்டு இல்லத்தில் குறிப்பேடு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இல்லத்திற்கு வருகை தருவோரால் இல்லத்தின் குறைநிறைகள் இக்குறிப்பேட்டில் பதிவு செய்யப்படும். பின்னர் அவ்விபரங்கள் நிர்வாக சபைக் கூட்டங்களில் ஆராயப்பட்டு ஏற்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். தற்பொழுதுள்ள நிதி நிலைமையில் எமது இல்லத்திற்குக் கிடைகின்ற அன்றாட அன்பளிப்புகள் அன்றாடச் செலவுகளுக்கே போதுமானதாக இருக்கின்றது. ஏதாவது வேலைத் திட்டங்கள் மேற் கொள்ளப்பட வேண்டுமாயின் அதற்குப் பொது மக்கள், அரச அரச சார்பற்ற நிறுவனங்கள், பாரிய அன்பளிப்புச் செய்யக் கூடிய நலன் விரும்பிகள் போன்றோரின் உதவியை நாட வேண்டியுள்ளது. ஸ்ரீ பரமானந்தா இல்ல நிர்வாக சபையினரால் தீர்மானிக்கப்பட்டதும் முதன்மை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியதுமான வேலைத் திட்டங்கள் கீழே தரப்பட்டுள்ளன. முதல் மூன்று வேலைத்திட்டங்களையும் இவ்வருடமான 2018ம் ஆண்டினுள் முடிப்பதற்கு உத்தேசிக்கப் பட்டுள்ளது. எனவே, இவற்றிற்கான நிதி சேகரிப்பில் பொது மக்களின் பங்களிப்பையும் கோரி நிற்கின்றோம்.

(1) கல்வி கற்கும் மண்டபமும் மகாநாட்டு மண்டபமும்:

எமது இல்லத்திற்கு கல்வி கற்கும் மண்டபமும் மகாநாட்டு மண்டபமும் இல்லாமை பெருங் குறையாகக் கருதப்படுகின்றது. எமது பிள்ளைகள் ஐந்து அல்லது ஆறு இடங்களில் அங்கங்கே குழுக்களாகப் பிரிந்து கல்வி கற்று வருகின்றனர். கூட்டங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடாத்துவதற்குப் பொருத்தமான மண்டபம் ஒன்று அவசியமாகத் தேவைப் படுகின்றது. மிகப் பழையதும் திருத்தம் செய்ய முடியாத நிலைமையிலுள்ளதுமான கட்டிடம் ஒன்றை முற்றாக அகற்றி விட்டு அவ்விடத்தில் கீழ் மேல் மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்று அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக் கட்டிடத்தில் கணனி அறையும் நூலகமும் உள்ளடக்கப் படுதல் வேண்டும். தேவையான தளபாடங்களுடன் இவ்வாறான கட்டிடத்தை அமைப்பதற்கு ருபா 15 மில்லியனுக்கு மேல் தேவைப்படுமென எதிர்பார்க்கின்றோம். எனவே முதலில் கீழ் மாடியை மட்டும் இவ்வருடத்தினுள் கட்டிமுடிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இக் கட்டிடத்திற்கான மதிப்பீடும் மற்றைய விபரங்களும் வெகு விரைவில் இவ்விணையத்தளத்தில் வெளியிடவுள்ளோம்.

(2) பிற்பக்கத்திலுள்ள வயற் காணிக்கு சுற்று மதில் கட்டுதல்

ஸ்ரீ பரமானந்தா இல்லத்துடன் இணைந்த கிழக்குப் பக்கத்தில் கிட்டத்தட்ட 5 பரப்பளவைக் கொண்ட வயற் காணி ஒன்றுள்ளது. இக்காணிக்குச் சுற்று மதில் கட்டி பாதுகாப்பை மேற்கொண்டு அதில் தென்னை, வாழை போன்ற பெரு மரச் செய்கைகளை மேற்கொளவ்தற்குத் தீர்மானிக்கபப்ட்டுள்ளது. இதற்கான மதிப்பீட்டு விபரங்களும் இந்தப் பத்தியில் வெகுவிரைவில் சேர்க்கப்படும் என்பதையும் தயவுடன் அறியத் தருகின்றோம்.

(3) பிள்ளைகளைப் பாடசாலைக்குக் கொண்டு செல்வதற்கும் கொண்டு வருவதற்கும், வேறு தேவைகளுக்குமாக “ஹயஸ்” வாகனம் ஒன்று கொள்வனவு செய்தல்:

தற்பொழுது பிள்ளைகள் மூன்று பாடசாலைகளுக்கும் போய் வருவதில் சில வேளைகளில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவர்கள் பாடசாலைக்குப் போய் வருவதற்கு வாகன ஒழுங்கு செய்வது மிகவும் அவசியமாகக் கருதப்படுகின்றது. தற்பொழுது முச்சக்கர வண்டியில் சில பிள்ளைகள் மட்டும் ஏற்றி இறக்கப்படுகின்றனர். சிரமங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு கிட்டத்தட்ட ரூபா 850000.00 பெறுமதியில் Re-condition ஹயஸ் வாகனமொன்று நிறுவனத்திலிருந்து நேரடியாகக் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானித்துள்ளோம்.

(4) ஸ்ரீ பரமானந்தா இல்லத்தின் நுழை வாயிலுக்கு எதிரிலுள்ள தோட்டக் காணியைக் கொள்வனவு செய்தல்:

ஸ்ரீ பரமானந்தா இல்லத்தின் நுழை வாயிலுக்கு எதிராகவுள்ள கிட்டத்தட்ட 2 பரப்பளவைக் கொண்ட, கனகசிங்கப் பிள்ளையார் கோயிலுக்கு உரித்தான காணி ஒன்று விற்பனைக்கு உள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. எமது பிள்ளைகளுக்குத் தனிப்படட்ட ஆசிரியர்களை ஒழுங்கு செய்து பிரத்தியேக வகுப்புகளை நடாத்துவதற்கு இவ்விடம் மிகவும் பொருத்தமானதாகக் கருதப்படுகின்றது. தற்பொழுது இவ்விடயம் விலைப் பேச்சுவார்த்தை நிலையில் இருக்கின்றது.

(5) ஆண் சிறுவர்க்கென கொள்முதல் செய்யப்பட்ட காணிக்கு சுற்று மதில் கட்டுதல்:

ஆண் பெண் சிறுவர்களை வெவ்வேறு கட்டிடத்தில் என்றாலும் ஒரே வளாகத்தினுள் வைத்துப் பராமரிப்பதற்குச் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களம் அனுமதிப்பதில்லை. எனவே கிட்டத்தட்ட 03 வருடங்களுக்கு முன்னர் எமது இல்லத்தில் இருந்த ஆண்சிறுவர் யாவரும் வேறு இல்லங்களுக்கு மாற்றப்பட்டு விட்டனர். ஆண் சிறுவர்க்கென பிரதான வளாகத்திற்கு வெளியே காணி ஒன்று கொள்முதல் செய்துள்ளோம். முதலில் இதற்குச் சுற்று மதில் கட்டவேண்டியுள்ளது. இந்த வருடத்தினுள் சுற்று மதிலைக் கட்டி முடிப்பதற்கு ஆலோசிக்கபப் ட்டுள்ளது. இதற்கான மதிப்பீட்டு விபரங்களை வெகுவிரைவில் இப்பத்தியில் சேர்க்கவுள்ளோம்.

(6) ஆண் சிறுவர் தங்குவதற்கான கட்டிடம் அமைத்தல்:

மேலே (4) ம் பந்தியிற் குறிப்பிட்ட காணியில் ஆண் சிறுவர்க்கென ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டு ஆண் சிறுவர்களையும் வைத்துப் பராமரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தங்கள் இனிமேல்தான் மேற் கொள்ளப்படல் வேண்டும்.

(7) ஸ்ரீ பரமானந்தா இல்லத்தை விட்டு வெளியேறிய பிள்ளைகளுக்கு மேற்படிப்பைத் தொடர்வதற்கான உதவி:

க.பொ.த.(உ.த) பரீட்சை எடுத்த பிள்ளைகளை ஸ்ரீ பரமானந்தா இல்லத்தில் வைத்துப் பராமரிப்பதற்கு சிறுவர் நன்னடத்தை பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் அனுமதிப்பதில்லை. அவர்கள் பெற்றாருடனோ உறவினருடனோ இணைதல் வேண்டும். பல்கலைக்கழகப் படிப்பைத் தொடர்வதற்கு இல்லத்தால் உதவி செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் பிரத்தியேக கல்வி நிறுவனங்களில் தெரிவு செய்யப்பட்டு கற்கை நெறிகளைத் தொடர்வதற்கு இந்தப் பிள்ளைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இவ்வாறான பிள்ளைகளின் விபரங்கள் எம்மிடம் உள்ளன. இவர்களின் கல்வியைத் தொடர்வதற்கு எவராவது முன்வந்து பொறுப்பேற்பதற்குப் பரோபகாரிகள் தர்ம சிந்தனையாளர்கள், தாராளமனப்பான்மை உடையோர் போன்றோரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.