சுருக்கமான தகவல்

ஸ்ரீ பரமானந்தா இல்லம் பற்றிய சுருக்கமான தகவல்

ஆதரவற்ற சிறுவர்களும் முதியோரும் தனித்து விடப்படுகின்ற போது அவர்களைப் பாதுகாப்பது, பராமரிப்பது, வழிநடத்துவது, பயிற்றுவிப்பது என்பன பொறுப்புள்ள சமூகத்தின் கடமையாகும். இவ் வகையில் நாடு முழுவதும் ஆதரவற்று தனித்து விடப்படும் சிறுவர்களையும் முதியோரையும் பராமரிப்பதற்காக இவ்வாறான தொண்டு நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன.

இவ்வில்லமும் மேற்குறிப்பிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு சுவாமி பரமானந்தர் அவர்களால் 1969 ம் ஆண்டு நிறுவப்பட்டு பன்னிரண்டு வருட காலம் வரை அவராலேயே நிர்வகிக்கப்பட்டு வந்தது. அநாதரவான சிறுவர்களையும், துணையேதுமின்றித் தவிக்கும் முதியோரையும் வைத்துப் பராமரிக்கின்ற வடமராட்சிப் பிரதேசத்தில் உள்ள பழமை வாய்ந்த ஒரேயொரு தொண்டு நிறுவனமாக இவ்வில்லம் திகழ்கின்றது. இங்கு தங்கும் சிறுவர்களுக்கும் முதியோர்கட்கும் உணவு, உடை, உறையுள்,சுகாதாரம் ஆகியவற்றுடன் கல்வி வசதிகள், பொழுது போக்கு, விளையாட்டு போன்ற தேவையான பல்வேறு வசதிகளையும் வழங்கிப் பராமரிக்கப் படுகின்றனர். உதவும் உத்தம மனம் கொண்டோர், தர்மசிந்தனையாளர்கள், தாராள மனப்பான்மை உடையவர்கள் ஆகியோரின் பங்களிப்புகளினாலேயே இவ்வில்லம் செயற்படுகின்றதென்பதையும் பணிவன்புடன் அறியத் தருகின்றோம்.

கல்வி, அனுபவம், தொண்டு மனப்பான்மை ஆகியவற்றுடன் நல்ல குடும்பப் பின்னணியுடன் சமூகத்தில் மதிப்புப் போன்ற தகுதிகளையும் கருத்திலெடுத்துத் தெரிவு செய்யப்பட்டு, மாவட்ட நீதிபதி, பிரதேச செயலாளர் ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டதுமான பதினொரு உறுப்பினர்களைக் கொண்ட தர்மகர்த்தா சபையினராலேயே இவ்வில்லம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இல்லத்தின் தேவைகளைச் செயற்படுத்துவதற்காகவும், தர்மகர்த்தா சபையால் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப் படுத்துவதற்காகவும் தற்சமயம் 20 ஊழியாக்ள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்பொழுது ஸ்ரீ பரமானந்தா இல்லத்தில் 59 பெண் சிறுவர்களும் 17 முதியோரும் வைத்துப் பராமரிக்கப்படுகின்றனர்.

எமது ஸ்ரீ பரமானந்தா இல்லமானது 30.10.1970 ஆம் திகதிய அரசாங்க வர்த்தமானி இல. 14930 மூலம் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும், வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளரின் சுற்று நிருபங்களுக்கிணங்க எமது இல்லச் சிறுவர்களின் செயற்பாடுகள் அங்கும் பதிவு செய்யப்பட்டு 01.01.2018 ஆம் திகதி தொடக்கம் இயங்கி வருகின்றது என்பதையும் மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.