சேவை அன்பளிப்பு

சேவைகள் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் அன்பளிப்புகள்:

ஸ்ரீபரமானந்தா இல்லத்தின் தேவைகளைக் கருத்திற் கொண்டு தனியாகவோ குழுக்களாகவோ சேர்ந்து சேவைகள் மூலம் அவை பூர்த்தி செய்யப்படுகின்றன.
உதாரணமாக:

அ) வைத்திய சேவைகள்:

ஸ்ரீபரமானந்தா சுவாமிகளின் காலத்திலிருந்து 2016ம் ஆண்டு வரை கொடிகாமம் வீதி, நெல்லியடியைச் சேர்ந்த டாக்டர் யோகஸ்வரதேவர் அவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இல்லத்திற்கு வருகை தந்து முதியோர், சிறுவர், ஊழியர்களுக்கு மிகுந்த அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் இலவசமாக வைத்திய சேவைகளை ஆற்றி வந்தமை என்றென்றும் இல்லத்தின் நினைவை விட்டு அகலாத ஒன்று. ஞாயிற்றுக் கிழமைகளில் டாக்டர் வந்தவுடன், சகல முதியோரும் வைத்திய சேவை தேவைபப்டும் சிறுவர்களும் தத்தமது வைத்தியக் கொப்பியுடன் வரிசையாக அமர்ந்து டாக்டருக்குக் காட்டுவது வழக்கமாக இருந்து வந்தது. முதுமை காரணமாக டாக்டர் யோகஸ்வரதேவரால் அச்சேவையைத் தொடர முடியவில்லை. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சுதோகுமார் அவர்களும், மந்திகை வைத்தியசாலை டாக்டர் பாலமுரளி அவர்களும் தற்பொழுது அச்சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இச்சேவை இல்லத்திற்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது.

(ஆ) சிரமதானப் பணிகள்:

இல்லச் சுற்றாடல், மூலை முடுக்குகள், இல்லத்திற்கு வரும் வீதியின் இரு மருங்கு போன்ற இடங்களிலுள்ள குப்பை கூழங்களை அகற்றிச் சுத்தமாக வைத்திருப்பதற்கு சிரமதானப் பணிகளே உதவுகின்றன. சிரமதானப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்வருவோர், பொலிசார், இராணுவத்தினர், பாடசாலைகள், வங்கிகள், சாரணர் போன்றோரைக் குறிப்பிடலாம். அனேகமாக இவ்வாறான சிரமதானப் பணிகள் விடுமுறை நாட்களிலேயே நிகழ்த்தப்படுகின்றன, வருகை தரும் பொழுது சிற்றுண்டிகள் குளிர்பானங்கள் முதலியவற்றையும் கொண்டு வந்து இல்லத்திலுள்ளவர்களுக்கும் பரிமாறி கடமைகளையும் மேற்கொள்வர். மதிய நேரம் அவர்களுக்கு இல்லத்தால் மதிய உணவு வழங்கப்படுவது வழமையான நடைமுறை.

(இ) உற்சாகமூட்டும் குதூகல நிகழ்வுகள்:

அரிமா கழகத்தினர் (Lions Club), பல்கலைக் கழக மாணவர்கள், பாடசாலை உயர் கல்வி மாணவர்கள் போன்றோர், தேவையான உபகரணங்கள், பொருட்கள், சிற்றுண்டி குளிர்பானஙக்ள், புறொஜெக்ரர் முதலியவற்றைக் கொண்டு வந்து எமது சிறுவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டவாறு உற்சாகமூட்டும் குதூகல நிகழ்வுகளை நடாத்துவர். பொது அறிவுக் கேள்வி பதில், பொது உளச்சார்புக் கேள்வி பதில், நகைச் சுவை நிகழ்ச்சிகள், அபூர்வமான விடயங்கள், விளையாட்டுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தி, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசில்களும் வழஙக்ப்படுகின்றன.

(ஈ) தனிப்பட்டவர்களால் மேற்கொள்ளப்படும் சேவைகள்:

முதியோர் அறைகள், கட்டில் உட்பட அறையிலுள்ள பொருட்கள் முதலியவற்றைச் சுத்தப்படுத்தல், ஒழுங்காக அடுக்கி வைத்தல், சமையல் வேலைகளுக்கு உதவுதல், உணவு பரிமாறுதல் போன்ற வேலைகளை இலவசமாகச் செய்வதற்கு அநேகமானோர் தனித்தனியாக வருவதுண்டு. வெளிநாட்டிலிருந்து வருகை தரும் மாணவர்களும் இவ்வாறான சேவையில் ஈடுபடுவதுண்டு. இவ்வாறு சேவைகளை மேற்கொள்பவர்கள் கோரும் பட்சத்தில் சேவை செய்ததற்கான அத்தாட்சிக் கடிதம் இல்லத்தால் வழங்கப்படும்.