பரிமாண நன்கொடை & நீதிமன்ற உதவிகள்
பொருள் அன்பளிப்புகள்
இல்லப் பராமரிப்புக்கும், சிறுவர் முதியோருக்கும் தேவையான எவ்வகையான பொருட்களாயினும் அதாவது உணவுப் பொருட்கள், கல்வி உபகரணங்கள், உடைகள் துணி வகைகள், அன்றாடம் உபயோகப்படுத்தப்படும் பொருட்கள், மின் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், தளபாடங்கள் முதலியன மனமுவந்து ஏற்றுக் கொள்ளப்படும். தீபாவளி, வருடப்பிறப்பு, தைப்பொங்கல் போன்ற விசேட தினங்களில் அனேக அன்பர்கள் முன்வந்து புத்தாடைகள் அன்பளிப்புச் செய்வதால் எமது சிறுவர் முதியோரின் ஆடைத் தேவைகள் ஓரளவு பூர்த்தி செய்யப்படுகின்றதென்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். ஆனால் பல்வேறு காரணங்களால் சமைத்த உணவும், உபயோகித்த உடைகளும் ஏற்றுக் கொள்வது தடுக்கப்பட்டுள்ளது. அன்பளிப்புச் செய்த பொருட்களின் விபரங்களுடன் அதன் பெறுமதியும் உள்ளடங்கிய பற்றுச் சீட்டு உடனுக்குடன் வழங்கப்படுகின்றது.
அரச பரிமாண நன்கொடைகள்:
சிறுவருக்கும் முதியோருக்கும் முறையே சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றிலிருந்து வருடாந்தம் கணக்கிடப்பட்டு ஒரு தொகை நன் கொடையாக வழங்கப் படுகின்றது. அதாவது, இல்லத்தால் மேற்கொள்ளப்படும் விண்ணப்பத்தின் அடிப்படையில் மாதம் ரூபா 500.00 வீதம் இல்லத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கியிருந்த நாட்கள் வருட முடிவில் கணக்கிடப்பட்டு அந்தந்த திணைக்களத்தால் மொத்தமாக வழங்கப்படுகின்றது. சமூக சேவைகள் திணைக்களத்தினூடாக உள்வாங்கப்படாமல் தாமே கொடுப்பனவைச் செலுத்தித் தங்கும் முதியோர்கள் அரச பரிமாண நன்கொடைக்குச் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை.
மாவடட் நீதிமன்றத்திலிருந்து கிடைக்கும் உதவிகள்:
நீதி மன்றங்களால் குற்றவாளிகளாகக் காணப்படுபவா்களுக்குத் தண்டப்பணம் விதிப்பது, சட்ட விரோதமாகக் கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்கள், பாவனைப் பொருட்கள், மணல், விறகு முதலியவற்றைக் கைப்பற்றுவது வழமையான நடைமுறை. இவ்வாறான தண்டப் பணங்கள் அல்லது பொருட்கள் ஆகியவற்றில் சிலவற்றை ஸ்ரீ பரமானந்தா சிறுவர் முதியோர் இல்லத்துக்கு வழங்கும்படி நீதிமன்ற நீதிபதிகளால் பணிக்கப்படுவதாலும் இடைக்கிடை அன்பளிப்புகள் கிடைக்கின்றன.