ஸ்ரீ பரமானந்தா இல்லத்தின் வரலாறு

ஆரம்ப கால வரலாறு:

நீர் வளமும், நிலவளமும் உடைய மருத நிலம் போன்றது வதிரியம்பதி. இப்பதியில் மதிப்பும் மரியாதையும் உடையவர் திரு சின்னையா திருக்கேதீஸ்வரர் திகழ்ந்தாா். அரச ஊழியராகப் பதவியாற்றிய போதும் ஆன்மீகத்துறையை நாடியது அவரது உள்ளம். அதன் விளைவாகவே தான் ஸ்ரீ பரமானந்தா சிறுவர் முதியோர் இல்லம் உதயமானது. நாதியற்றவர் என ஒருவர் இந்நாட்டில் இல்லையாக வைப்பேன் என்ற தளராத மன உறுதியோடு இவ்வில்லத்தினை 1969ம் ஆண்டில் ஆரம்பித்தார்.

உள்ளுரிலும், யாழ் பிரதேசங்களிலும், வெளிமாவட்டங்களிலும் தர்ம சிந்தனை கொண்ட பொதுமக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். இதன் பிரதிபலனாக 1969 ம் ஆண்டிலேயே மிகக்குறைவான வசதிகளுடன் வதிரிக் கிராமத்தில் இந்த ஸ்ரீ பரமானந்தா சிறுவர் முதியோர் இல்லம் அமைக்கப்பட்டது. விரைவாகவே அனாதரவான சிறுவர் முதியோர் நூற்றுக் கணக்கிற் சேரத் தொடங்கினர். நன்கொடைகளை அதிகரிப்பதற்குப் பல்வேறு வழிவகைகளைக் கடைப்பிடித்து, பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இவர் ஆற்றிய பணி அளப்பரியது. நிதி, உணவுப் பற்றாக்குறை காரணமாக ஒரு நேர உணவு அல்லது பாண் மட்டும் வழங்கபப்ட்டுள்ளமை ஆரம்ப நாட்களில் நினைவு கூர வேண்டியவை. இரவு பகலாக வன்னிப் பகுதிகளுக்குத் தானே சென்று மக்களிடமிருந்து சேர்க்கப்பட்ட நெல், தானியங்கள், மரக்கறி வகைகள் முதலியவற்றைக் கொண்டு வந்து உணவாக்கி இல்லத்தில் உள்ளவர்களுக்கு ஆரம்ப நாட்களில் வழங்கியமை ஒரு பெரும் சாதனையாகக் கொள்ளப்படல் வேண்டும்.

தர்மம் சம்பளத்திற்குச் செய்யும் காரியமன்று. அதனால் எவ்வகையான ஊழியர்களையும் நியமனம் செய்யாது தனி ஒரு மனிதனாகவே கிட்டத்தட்ட பன்னிரண்டு வருட காலம் அவராலேயே இவ்வில்லம் நிருவகிக்கப்பட்டு வந்தது. இக்கால கட்டத்தில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் சிறுவரும் முதியோரும் வாழக்கூடிய கட்டிடங்களைக் கட்டியெழுப்பி தன் பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டார்.

இல்லத்தின் எதிர்காலம் பற்றி சுவாமி ஸ்ரீபரமானந்தரின் சிந்தனையில் உதித்து மேற்கொள்ளப்பட்ட நடைமுறை:

காவி உடை தரித்து வயது முதிர்ந்த நிலையில் தனது எழுபத்து நான்காவது அகவையில், உடல் தள்ளாடத் தொடங்கிய பொழுது, இவ்வில்லத்தைத் தர்ம சாதனமாக மாற்ற வேண்டுமென சுவாமிகள் நினைத்தார். நிர்வாக நடை முறைகள், வரவு செலவுக் கணக்குகள், இல்ல நடவடிக்கைகளைக் கவனித்தல் போன்ற பிற பொறுப்புக்கள் முதலியவற்றை ஒருவர் தாங்குவது முடியாத காரியமாகும். இதனால் சுவாமிகள் இந்தப் பொறுப்புகளைப் பலரோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென விரும்பினார். இதற்குச் சிறந்ததொரு தீர்வாக நிறுவனத்தையும் அதற்குரிய சகல சொத்துக்களையும் நிர்வாகத்திலே தர்மசாதனம் செய்து தெரிவு செய்யப்பட்ட தகுதி வாய்ந்த பொதுமக்கள் சிலரிடம் சட்டரீதியாக ஒப்படைக்க வேண்டுமென விரும்பினார். அதன் பிரகாரம் 1982 ஆம் ஆண்டு மாசி மாதம் ஏழாந் திகதி தர்மசாதன உறுதி கைச்சாத்திடபப்ட்டது. சுவாமி ஸ்ரீபரமானந்தரோடு மானுட நேயம் கொண்ட அறுவர் மேலதிகமாக நியமனம் பெற்றனர்.

மிகக் கட்டுப்பாடாக வரையப்பட்ட தர்மசாசனத்தில் நிர்வாகத்தை மேற்கொள்கின்ற தர்மகர்த்தாக்கள் செயற்பட வேண்டிய முறைகள் நுணுக்கமாக வரையறுக்கப் பட்டுள்ளன. இல்லத்தின் சொத்து “சிறுவர் முதியோர் இல்ல ஆச்சிரம தர்மம்” என்ற பெயரில் எழுதப்பட்டிருந்தது. இல்லத்தின் இயக்குநர்கள் அதன் சொந்தக் காரர்கள் அல்லர். சம்பளம் பெறுபவர்களும் அல்லர். எவரும் தனித்தனியாகத் தாங்கள் நினைத்தவாறு இயங்க முடியாது. கூட்டுப் பொறுப்புடன் இயங்க வேண்டும். முறைகேடாக நடந்து கொள்ளும் உறுப்பினர்கள் மீது அல்லது உடந்தையாக இருந்த சபையினர் மீது பொதுமக்கள், மாவட்ட நீதிமன்றத்திற்கோ அல்லது பிரதேச செயலாளருக்கோ முறைப்பாடு செய்ய முடியும். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கும் தொடரலாம். இத்தர்ம சாதனத்தின் நோக்கங்களை மாற்றவோ அல்லது சொத்துக்களை அபகரித்துக் கொண்டு தப்பிவிடவோ எவராலும் முடியாது.

சுவாமி ஸ்ரீபரமானந்தருககுப் பிந்திய காலம்:

ஸ்ரீ பரமானந்தா சுவாமிகள் 10.04.1995 ஆம் திகதி சமாதி அடைந்தார். இல்ல வளவில் சமாதி அடைந்த இடத்தில் அமைக்கப்பட்ட நினைவாலயத்தைத் தற்பொழுதும் பார்வையிடலாம்.

முன்பிருந்த தர்மகர்த்தா சபை உறுப்பினர்களிற் சிலர் தம் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டனர். அதன் பின்னர் புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தர்மகர்த்தா சபையினரின் கருத்து வேறுபாடு காரணமாக யாப்பு விதிகளின் பிரகாரம் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. பழைய யாப்பு நிராகரிக்கப் பட்டுப் புதிய யாப்பு ஒன்று நீதிமன்றத்தால் தயாரிக்கப்பட்டு 05.09.2005 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த யாப்பு பருத்தித்துறை மாவட்ட நீதி மன்றத்தினால் வரையப்படட்து.

புதிய யாப்பின் பிரகாரம் பதினொரு உறுப்பினர்களைக் கொண்டதாக தர்மகர்த்தா சபை திருத்தியமைக்கப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இச்சபை இயங்கிக் கொண்டு வருகின்றது. நிர்வாக சபையினருக்கு மாவட்ட நீதிமன்றமும் பிரதேச செயலகமும் வழிகாட்டிகளாக விளங்குகின்றன.