ஸ்ரீ பரமானந்தா சுவாமிகளின் வரலாறு
ஸ்ரீ பரமானந்தா சிறுவர் முதியோர் இல்லம் 1969ம் ஆண்டு அமரர் சின்னையா திருக்கேதீஸ்வரர் என்பவரால் ஆரம்பிக்கபப் ட்டது. வதிரியம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது கல்வியை யா/விக்கினேஸ்வராக் கல்லூரியிலும், யா/புலோலி வேலையுதம் மகா வித்தியாலயத்திலும் கற்றுக் கொண்டார். பல அரச திணைக்களங்களில் எழுது வினைஞராகக் கடமையாற்றி இறுதியாகக் கொழும்பு வனபரிபாலனத் திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றார். இவருக்கு மூன்று ஆண்குழந்தைகளும் இரு பெண் குழந்தைகளும் இருந்தனர். இல்வாழ்க்கையில் இணைந்திருந்த பின்னர் ஓய்வு பெற்றதும் அறிவு, ஒளி, தியானம், ஆன்மீகம் பற்றிய சிந்தனைகள் திருக்கேதீஸ்வரரிடம் ஏற்படத் தொடங்கியது.
கோயில்களுக்கும் ஆச்சிரமங்களுக்கும் சென்று துறவிகளைச் சந்திக்க வேண்டுமென்ற சிந்தனை அவர் மனதில் குடிகொண்டது. இதனால் சமய தத்துவ நூல்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். 1964ம் ஆண்டு இந்தியச் சுற்றுப்பயணத்தில் கன்னியாகுமரி முதல் பத்திரிநாத் வரையும் அவரது சுற்றுலா அமைந்தது. இந்தியாவிலுள்ள ஆச்சிரமங்களுக்கும் ஆத்மீக நிலையங்களுக்கும் சென்று அனுபவஙக்ளைப் பெறுவதிலேயே தனது நேரத்தைச் செலவு செய்தார்.
தியானம் அவருக்கு வெற்றியைக் கொடுத்தது. பம்பாய்க்கு இவர் சென்றபோது “ஸ்ரீ திறூ கோத்லெஹியா” சுவாமிகள் (Swami Sri Dhiroo Ghatlehia) இவரை “முக்தானந்தா பரமஹம்சா (Swami Muktananda Paramahamsa) சுவாமிகளிடம் அழைத்துச் சென்றார். அங்கு முக்தானந்த பரமஹம்சா சுவாமிகளிடமே உபதேசங்களைப் பெற்றுக் கொண்டார். இறுதியில் மூன்று நாட்கள் அவரது கையில் திருவோடுகள் கொடுக்கப்பட்டு யாசித்து வருமாறும், யாசித்தவற்றையே உண்ணுமாறும் முக்தானந்த சுவாமிகளாற் கட்டளையிடபப்ட்டது. அதன் பின்னரே ஆன்மீகம் பற்றிய உபதேசங்களைப் பெற்று காவியுடை தரித்துக் கொண்டார்.
இமயமலை அடிவாரத்தில் சிவ வழிபாட்டை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வேளை உணவுக்காகவும் நீருக்காகவும் மக்கள் பட்ட கஷ்டங்களை நேரே கண்ணாற் கண்ட காட்சிகள் அவர் மனதை உலுக்கின. அதன் விளைவுதான் தான் பிறந்த நாட்டில் நாதியற்றவர்கள் எவரும் இருக்கக் கூடாதென ஒரு தற்காலிகக் கொட்டகையில் இந்த ஆச்சிரமத்தை நிறுவினார்.
அவர் விதைத்த ஆலம் வித்து இன்று ஒரு விருட்சமாக வளர்ந்து அனாதரவான சிறுவர்கள் முதியோர்கள் எனப் பலரைப் பாதுகாத்து பராமரித்து வருவதையிட்டு, இவ்வில்லம் ஸ்ரீ பரமானந்தா சுவாமிகளை நினைவுகூர்ந்து, பெருமை கொள்கின்றது.